தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற ஆசிரியர் தின விழா!

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா செப்டம்பர் 3 ஆம் தேதி மிகவும் விமர்சையாகவும், புதுமையான டிஜிட்டல் முறையிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் அருட்திரு முனைவர் ஜான் சக்கரியாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவு எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதைப் பற்றி மாணவர்களிடையே மிகத் தெளிவாகவும் எழுச்சியூடக்கூடிய வகையிலும் எடுத்துரைத்தார்.

விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, பள்ளியின் ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் புகைப்படத்துடன் அவர்களின் நற்குணங்களை வரிசைப்படுத்தி, அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகத் தயாரிக்கப்பட்ட சிறப்பு வீடியோ திரையிடப்பட்டது. இந்த நவீன டிஜிட்டல் கொண்டாட்டம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

பள்ளியின் இந்தத் தனித்துவமான முயற்சி, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையிலும், மாணவர்களின் மனதில் ஆசிரியர்கள் மீதான மரியாதையை மேலும் உயர்த்தும் வகையிலும் கம்பீரமாக அமைந்து அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளது.