தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் 80-வது விடுதலை நாள் விழா கோலாகலம்!


தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியின் 140-வது கல்வி ஆண்டில், தாய் திருநாட்டின் 80-வது விடுதலை நாள் விழா பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாகவும் எழுச்சியோடும் நடைபெற்றது. இவ்விழாவினை பள்ளியின் ஏழாம் வகுப்பு ஆசிரியர்களும் மாணவர்களும் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தினார்கள்.

இவ்விழாவிற்குப் பன்னாட்டு அரிமா சங்கங்களின் நல்லெண்ணத் தூதுவரும் பன்னாட்டு நிர்வாகியுமான PMJF Lion 'நட்பு நாயகர்' S. முகமது ரஃபி அவர்கள் தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக, சிறப்பு விருந்தினரை ஆசிரியர் திரு. எம். ஜார்ஜ் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினர் தனது உரையில், பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஐயாவின் மகத்தான சாதனைகள், வரலாற்று குறிப்புகள் மற்றும் வாழ்க்கையின் தத்துவங்கள், எதார்த்தங்களை எடுத்துரைத்து மாணவர்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பள்ளியின் தாளாளர் தந்தை அருட்திரு M. இருதயராஜ் அவர்கள், மாணவர்கள் வாழ்க்கையில் மென்மேலும் உயர்வடையத் தேவையான நற்சிந்தனைகளையும் உயரிய கருத்துகளையும் வழங்கி வாழ்த்தினார்.

பள்ளியின் தலைமையாசிரியர் தந்தை அருட்திரு சவரி சேசுராஜ் அவர்கள் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பகிர்ந்ததோடு, மாணவர்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டிய ‘10 கட்டளைகள்’ அடங்கிய சிறப்பு அட்டையை அச்சடித்து அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினார். மேலும், தலைமையாசிரியர் தந்தை அவர்களே நேரில் பறை எடுத்து மாணவர்களோடு சேர்ந்து பறை இசைத்து அனைவரையும் உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் அருட்திரு ஏ. ஆரோக்கியசாமி அவர்கள் சிறப்பு வாழ்த்துரை வழங்கி, மாணவர்கள் மொபைல் போன் பயன்பாட்டிற்கும் போதைப்பொருட்களுக்கும் அடிமையாகாமல் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்து மாணவர்களை உறுதியேற்கச் செய்தார். தொடர்ந்து, அவர் மாணவர்களுடன் இணைந்து ஒரு சிறு நடனமாடி, அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

விழாவில் சமாதானத்தின் குறியீடாக அமைதிப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற அணிவகுப்புப் பேரணியில், ஒவ்வொரு வகுப்பினரும் வெவ்வேறு கருப்பொருள்களைத் தலைப்பாகக் கொண்டு, மிக நேர்த்தியாகத் தங்கள் அணிவகுப்பு மரியாதையை நடத்திச் சிறப்பித்தனர்.

மாநில அளவிலான கலைப்போட்டிகளில் பங்குபெற்று சாதனை படைத்த பள்ளியின் வில்லுப்பாட்டுக் குழுவினர் தங்களின் கம்பீரமான வில்லுப்பாட்டு கலைநிகழ்ச்சியை நடத்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர்.

மேலும், நாட்டின் விடுதலைப் போராட்டத் தலைவர்கள் போல வேடமணிந்து வந்த மாணவர்கள் எழுச்சிமிக்க உரையாற்றினர். இவ்வாறு மாணவர்கள் நாட்டுத் தலைவர்கள் வேடமணிந்து வர அவர்களுக்குத் தேவையான உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்த தமிழ் ஆசிரியர் திரு. ஜெகன் அவர்களுக்கு விழாவில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக அருகாமையிலுள்ள தூய இதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை அருட்சகோதரி சேவியர் அவர்கள் கலந்துகொண்டு, தங்கள் பள்ளி மாணவிகளின் சிறப்பு நடன நிகழ்ச்சியை ஊக்கப்படுத்தினார். இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம் மற்றும் தற்காப்புக்கலை போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் விழாவை அலங்கரித்தன.

முன்னதாக, ஆசிரியர் திரு. பார்த்திபன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆசிரியர் திரு. சந்தானம் அவர்கள் மிகத் திறம்படத் தொகுத்து வழங்கினார். நிறைவாக ஆசிரியர் திரு. இருதயம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள், அருட்தந்தையர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவச் செல்வங்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.